Heavy frost in Kodaikanal The minimum temperature is 4 degrees Celsius

திண்டுக்கல்

கொடைக்கானலில் குளிர் சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடும் உறை பனியால் மக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். குறைந்தபட்ச வெப்பநிலையாக 4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவி வருவதால் கடந்த வாரம் உறைபனி பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கடுமையான குளிர் நிலவியது.

நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக நான்கு டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் உறைபனி ஏற்பட்டது. குறிப்பாக அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், கீழ்பூமி, ஏரிச்சாலை, ஜிம்கானா உள்பட பல்வேறு இடங்களில் பனி போர்த்தியது போல வெண்மையாக காட்சியளித்தது.

மேலும், வாகனங்களின் கண்ணாடிகள் எல்லாம் பனி பரவி இருந்தது. கடும் குளிர் காரணமாக மக்களின் நடமாட்டமும் மிகவும் குறைவாக இருந்தது.

பின்னர் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வெப்பம் நிலவியது. பிறகு இரவு வேளையில் கடுமையான குளிர் ஏற்பட்டது. மாறுபட்ட பருவ நிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காலை, மாலை நேரங்களில் மக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். மேலும் காலை நேரத்தில் பனியால் டீசல் உறைந்து விடுவதால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. செடி, கொடிகளும் கருகி வருகின்றன.

குளிர் சீசன் தொடக்கத்திலேயே இப்படி இருப்பதால் இனிவரும் காலத்தில் பனியின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தற்போது தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதமான குளிரை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் காலை வேளையிலேயே நகரின் பல இடங்களுக்கு சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.