யூ-டியூப் வீடியோவைப் பார்த்து தன் மனைவிக்குப் பிரசவம் பார்த்த கார்த்திகேயனை போலீஸார் கைது செய்து பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்து ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவையில், நிஷ்டை வாழ்வியல் மையத்தின் சார்பாக வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிமுறை பயிற்சி முகாம் நடத்த இருந்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பிரசவம் குறித்த அச்சத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. கர்ப்பிணிகளுக்கு சுகபிரசவ பயிற்சி, வாழ்வியல் பயிற்சி என போலியாக பயிற்சி அளித்து 1.5 கோடி ரூபாய் ஹீலர் பாஸ்கர் சுருட்டிய தகவலும் வெளியாகியுள்ளது.

கோவை அருகேயுள்ள கோவைப்புதூரில் நிஷ்டை வாழ்வியல் பயிற்சி ஆலோசனை என்ற பெயரில் தனியார் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மருத்துவம், யோகா, வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பை ஹீலர் பாஸ்கர் எடுத்து நடத்தி வருகிறார். 
இவர் இனிய சுக பிரசவம் ஒரு வரம் என்ற தலைப்பில், வரும் 26-ம் தேதி ஒரு நாள் இலவச பயிற்சி வழங்குவதாக அறிவித்தார். இவர் மீது, ஜான்சன் (29) என்பவர், மருத்துவ நடைமுறைக்கு எதிராக பயிற்சி அளிக்க உள்ளதாகவும், இதற்காக தன்னிடம் ரூ.5 ஆயிரம் பெற்றதாகவும் போலீசில் புகார் அளித்தார். 

இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹீலர் பாஸ்கர், அவரது மேலாளர் சீனிவாசன் (32) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  முன்னதாக, போலீசாரிடம் ஹீலர் பாஸ்கர் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: கோவைபுதூர் லட்சுமி நகரில் அனாடமிக் தெரபி பவுண்டேசன் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறேன்.  நான் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் சரளமாக பேசுவேன். டிவி நிகழ்ச்சியில் பேசியதால் பிரபலமடைந்தேன். 

இதை வைத்து பணம் சம்பாதிக்க தீவிரம் காட்டினேன். இயற்கை, மூலிகை, வாழ்வியல் சிகிச்சைக்காக என்னிடம் பலர் பயிற்சி பெற்றனர். 5 ஆயிரம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் வரை அறக்கட்டளைக்கு நன்கொடை வாங்கினேன். கடந்த 8 ஆண்டாக இந்த அறக்கட்டளை மூலமாக 1.5 கோடி ரூபாய்க்கு அதிகமாக சம்பாதித்தேன். அனைத்து தென் மாநிலங்களிலும்  பயிற்சி வகுப்பு நடத்தி பணம் பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனிடையில் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.