he was the source for our life mother cryied abour he son who died by police attack

தூத்துக்குடி

எங்கள் குடும்பமே அவனால் தான் பிழைச்சிட்டு இருந்துச்சு என்று தூத்துக்குடி போராட்டத்தில் காவலாளர்கள் நடத்திய தடியடியில் இறந்தவரின் தாய் கதறினார். 

கடந்த 22–ந் தேதி நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது காவலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். இதில், சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்த செல்வசேகர் (40) என்பவர் பலத்த காயமடைந்தார்.

பின்னர், அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் செல்வசேகர் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய தந்தை பலவேசம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு தாய் மாசாணம் மற்றும் இரண்டு அக்காள்கள் உள்ளனர்.

இதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. மற்றொருவருக்கு திருமணம் ஆகவில்லை.

செல்வசேகர் பலியானது குறித்து அவருடைய தாய் மாசாணம் கதறிக்கொண்டே கூறியது: "என்னுடைய மகன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். யாரிடமும் சரியாக பேச மாட்டான். அவன் உண்டு, வேலை உண்டு என்று இருப்பான். 

என்னுடைய கணவர் இறந்த பிறகு, அவனது வருமானத்தில்தான் எங்களது குடும்பம் நடந்து வந்தது. கடந்த 22–ஆம் தேதி வேலைக்கு சென்றான். ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இன்று விடுமுறை வீட்டுக்கு செல்லுங்கள் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதனையடுத்து என்னுடைய மகன் ஊருக்கு வருவதற்காக 3–வது மைல் பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளான். அங்கு வந்த காவலாளர்கள் என்னுடைய மகனை சரமாரியாக லத்தியால் தாக்கி வயிற்றிலும், மார்பிலும் மிதித்து காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவன், மருத்துவமனையில் இன்று (அதாவது நேற்று) காலை பரிதாபமாக இறந்துவிட்டான். அப்பாவியான என்னுடைய ஒரே மகனை இழந்துவிட்டேன். இனி பிழைப்புக்கு நாங்கள் என்ன செய்ய போகிறோம்" என்று அவர் கூறினார்.

செல்வசேகரின் அக்காள்களில் ஒருவர், "அரசு, வீட்டில் ஒருவருக்கு வேலையும், ரூ.10 இலட்சமும் தருவதாக கூறியுள்ளது. அந்த 10 இலட்சம் ரூபாய் எங்களுடைய தம்பி உயிரை திருப்பி தருமா?" என்று கேட்டபடி கதறி அழுதார்.

போராட்டத்தில் கலந்து கொள்ளாத வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர் மீதும் தடியடி நடத்தி காவலாளர்கள் அராஜகப்போக்கை கடைப்பிடித்துள்ளனர் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.