He lives in the underworld for 50 days from escaping the police
இந்திய அரசின் கண்களில் மண்ணை தூவிவிட்டு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் எப்படி தலைமறைவாக இருக்கிறாரோ அப்படித்தான் தமிழ்நாட்டிலும் ஒரு பிரபலம் காவல் துறையினரிடம் இருந்து தப்பித்து 50 நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்! எஸ்.வி.சேகர்...! அவரின் தலைமறைவு வாழ்க்கை முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது. சென்னை எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை அழைத்து பேசிய ப்ரஸ் மீட்டில் தனியார் ஊடக பெண் செய்தியாளரிடம் வரம்பு மீறி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து பா.ஜ.க., நிர்வாகி எஸ்.வி.சேகர் ஆளுநருக்கு ஆதரவாக முகநூல் பதிவை வெளியிட்டார். அவரின் பதிவு பெண்களை கொச்சப்படுத்துகிறது என எதிர்ப்புகள் கிளம்பி அவரின் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கின் மீது விசாரணையை நடத்திய நீதிமன்றம் அவரை கடுமையாக கண்டித்து கைது செய்ய உத்தரவிட்டது. ஆனால் ஐம்பது நாட்களாகியும் அவர் கைது செய்யப்படவில்லை.

தலைமறைவு வாழ்க்கை என சொல்லப்பட்டாலும் மத்திய அமைச்சர் பொ.இராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திரு.எஸ்.வி.சேகரும் கலந்துகொண்டார் எனவும், தனது குடும்ப நிகழ்ச்சிகளில் எஸ்.வி.சேகர் பங்கேற்றார் எனவும் சில புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

மேலும் சமீபமாக பேசிய தமிழ்நாட்டு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ‘அவர் என்ன அவ்ளோ பெரிய குற்றம் செய்துவிட்டார்...?’ என்கிற ரீதியில் பேசியுள்ளார். எஸ்.வி.சேகரின் உறவினர்தான் கிரிஜா வைத்தியநாதன். ஆகவேதான் அவர் கைது செய்யப்படாமல் இருக்கிறார் எனவும் சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் கிளம்பியிருந்தது. இந்நிலையில்தான் சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக செயல்பட்டுள்ளது.

வரும் ஜுன் 20’ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் ஆக வேண்டுமென்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அநேகமாக இந்தக் கட்டுரை வெளிவரும் சமயத்திலோ அல்லது சில நாட்களிலோ எஸ்.வி.சேகர் ஆஜர் ஆகலாம் என செய்திகள் வருகிறது.
இன்னொரு புறம் இதிலிருந்தும் சட்டப்படி எப்படி தப்பிக்கலாம் என எஸ்.வி.சேகர் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்யவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் சிறந்த காவல் படை தெரிந்தே ஏமாறுகிறார்களா? அல்லது தாவூத் இப்ராஹிம் ஒளிந்திருக்கும் அட்ரஸ் அவர்களுக்கு தெரியாதா? என்பதுதான் அனைவரின் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
