மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடையில் வருவது அப்பகுதி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக ஸ்ரீதர் என்பவர் பணியாற்றி வருகிறார். ஸ்ரீதர் கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பதவி
உயர்வு பெற்ற அவர், மதுராந்தகத்தில் உள்ள பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

அந்த பள்ளியை ஸ்மார்ட் வகுப்பாக மாற்றவும் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் முயற்சி செய்து வருகிறார். ஆரம்ப கல்வியைத் தரமாக வழங்கவும் முயன்று வருகிறார்.

அதேபோல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறார். இதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் சீரடையைப்போலவே தானும் அணிந்து பள்ளிக்கு வருகிறார்.

ஆசிரியர்கள் மீதான அச்சத்தை போக்கும் வகையில் மாணவர்களிடம் நண்பர்களைப் போல இருக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வலியுறுத்தி வருகிறார். 

பள்ளிக்கு முடி வெட்டாமல் வரும் மாணவர்களுக்கு முடி வெட்ட பணம் கொடுத்து உதவுகிறார். பள்ளி சீருடையிலும், மாணவர்களுக்கு உதவும் வகையிலும் நடந்து கொள்ளும் தலைமையாசிரியர் ஸ்ரீதரின் நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஸ்மார்ட் வகுப்பு கொண்டு வரும் தமிழக அரசு ஸ்ரீதர் போன்ற ஆசிரியர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் தனியார் பள்ளிகளை அரசு பள்ளிகள் மிஞ்சும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.