HC questions pon manika vel

அருப்புக்கோட்டையில் சிலையை விற்ற டிஎஸ்பி காதர் பாஷாவை கைது செய்யாதது ஏன்? என சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரையில் ஆரோக்கியராஜ் என்பவரிடமிருந்து 6 பழங்கால சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரான காதர்பாஷா மற்றும் போலீஸ்காரரான சுப்புராஜ் ஆகியோர் கைப்பற்றியதாகவும், பின்னர், அதை விற்று இருவரும் பணத்தை பிரித்து எடுத்து கொண்ட்தாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் இதற்கான ஆதரங்களை ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆய்வாளர் காதர்பாஷா டிஎஸ்பியாகவும், சுப்புராஜ் சிறப்பு சார்பு-ஆய்வாளராகவும் உள்ளனர்.

எனவே இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவு எஸ்பி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு குறித்த ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் இன்று நேரில் ஆஜராகி தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி இன்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேரில் ஆஜரானார். அவரிடம் சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிஎஸ்பி காதர்பாஷாவை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார் நீதிபதி.

அதற்கு டிஎஸ்பி காதர்பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தகவல்தெரிவிக்கப்பட்டது.