மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதி ஜெகநாதன். இவர் கால்நடை உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் 2006 ல் மத்திய உணவு திட்டத்தில் மசூர் பருப்பை பயன்படுத்தினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் சமூக நலத்துறை மற்றும் மத்திய உணவு திட்டத்தல் மசூர் பருப்பை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரண கடந்த மாதம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள், உணவு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, ஜூலை 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார். மசூர் பருப்பு கொள்முதல் டெண்டர் மீதான தடையை நீக்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இந்த வழக்கு தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலர் பதில்மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.