HC notice to assembly secretary about MLAforSALE

எம்.எல்.ஏ. பண பேர விவகாரம் குறித்த வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் லஞ்ச பேரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது, ஆதரவாக வாக்களிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு 6 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும், சில எம்எல்ஏகளுக்கு 10 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டதாகவும் 2 எம்.எல்.ஏ.கள் கூறிய ரகசிய வீடியோ, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதாகவும் மனுவில் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார்.

இந்த மனு, மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எம்.எல்.ஏ. பண பேர விவகாரம் குறித்த வழக்கில் தமிழக சட்டப்பேரவை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதனை அடுத்து, சட்டப்பேரவை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விசாரணையின்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.

இதற்கு உயர்நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.