சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட தடைவிதிக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடல், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதிக்கு பின்புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் எழுப்ப தடைவிதிக்கக்கோரி வழக்கறிஞர் துரைசாமி பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்பதால், ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கவும் அந்த மனுவில் கூறப்பட்டது. 

மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிப்படி 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடற்கரையில் கட்டுமானப்பணி கூடாது எனவும் வழக்கறிஞர் துரைசாமி மனுவியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.