HC judges questions about tasmac protestors
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் பெண்களும், குழந்தைகளும் விஷமிகளா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் மதுபான கடைகள் இருக்கக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து தமிழகத்தில் 3,303 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மறுபடியும் வேறு இடங்களில் கொண்டு வர தமிழக அரசு முயன்று வருகிறது. இதனை அடுத்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசின் இந்த செயலை எதிர்த்து, பல்வேறு இடங்களில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில், பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது, பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்களை போலீசார் இரும்புக்கர கொண்டு அடக்கியது.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுபவர்கள் விஷமிகளா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு முன்பு, நாம் தமிழர் கட்சியியைச் சேர்ந்த 21 பேர் மீது எப்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட்ட வழக்கில் கேள்வி எழுப்பினர்.
டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களும் குழந்தைகளும் போராடுவதை நேரடியாக பார்க்கிறோம், ஆனால், டாஸ்மாக் விவகாரத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
