வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை மீட்க முயன்றபோது, நகைகள் அடமானம் வைக்கப்பட்டு கடன் வாங்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வங்கி மேலாளர் கூறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

புதுக்கோட்டையில், கனரா வங்கியின் கிளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில், அருகில் இருப்பவர்கள் நகைக்கடன் வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நகையை மீட்பதற்காக வாடிக்கையாளர்கள் வங்கியை அணுகியுள்ளனர்.

அப்போது, நகைகள் அடமானம் வைத்து கடன் வாங்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வங்கி மேலாளர் சௌந்திராஜன் கூறியுள்ளார். 

இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சந்திர சேகரன் என்பவர் பணி புரிந்து வந்தார். இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து
கொண்டார். 

வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை, சந்திரசேகரன், மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், வங்கியில் நகை அடமானம் வைத்தவர்கள் வங்கி முன்பு குழுமியுள்ளனர். நகைக்கடன் பெற்றதற்கான ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வருவதால் அதிகாரிகள் செய்வதறியாத நிலையில் உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.