Handloom weavers urging central and state governments to reduce the price of silk yarn In the fight ...
ஈரோடு
பட்டு நூல் விலையை குறைக்க வேண்டி மத்திய மாநில அரசுகளுக்கு கைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வலியுறுத்தி உள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்கள், பட்டுநூல் விற்பனையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பட்டு நூல் விலை உயர்வை கண்டித்து 15–ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று கைத்தறி நெசவாளர்கள் முடிவு எடுத்தனர்.
அதன்படி, அவர்களுடைய வேலை நிறுத்தப் போராட்டம் நேற்றுத் தொடங்கியது. சத்தியமங்கலம், சதுமுகை, டி.ஜி.புதூர், புஞ்சைபுளியம்பட்டி, அந்தியூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் தங்களது தறிகளை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. இதில் அதிக அளவில் பட்டு சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பட்டு நூல்கள் சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதேபோல பெங்களூருவில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து வரும் பட்டு நூல் ஒரு கிலோ ரூ.3600–க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு மாதந்தோறும் நூலின் விலை படிப்படியாக உயர்ந்தது. தற்போது ஒரு கிலோ நூல் ரூ.5000 விற்பனையாகிறது.
இதேபோல பெங்களூருவில் இருந்து வரும் பட்டு நூல் ஒரு கிலோ ரூ.3200–ல் இருந்தது, தற்போது ரூ.4600–க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நூலின் விலை உயர்ந்து உள்ளதால் பட்டு சேலைகளின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு சேலைக்கு ரூ.750 முதல் ரூ.1,000 வரை உயர்த்த வேண்டும். இவ்வாறு விலையை ஏற்றினால் எங்களுடைய வியாபாரம் முழுமையாக பாதிக்கப்படும்.
இதுவரை கைத்தறிக்கு வரி கிடையாது. ஆனால் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு கைத்தறிக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதுமேலும் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக சாயப்பட்டறை உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
இந்த போராட்டம் வருகிற 30–ஆம் தேதி வரை நடைபெறும். எனவே மத்திய, மாநில அரசுகள் பட்டு நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள்.
