Half shaved postal staff protest On the 3rd day
வேலூர்
வேலூரில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் பாதி மொட்டை அடித்தும், நாமம் போட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய தபால் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் வேலூர் தபால் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் பணியாற்றும் எழுத்தர்கள், தபால்காரர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்கள், 4-ஆம் பிரிவு ஊழியர்கள் ஆகியோர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 3-வது நாளாகவும் நேற்றும் தபால் நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள், "கமலேஷ் சந்திரா குழுவின் பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு 1½ ஆண்டுகள் ஆகியும் அந்த பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. எனவே, அக்கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கினர்.
இதில், கோட்ட செயலாளர் வீரன் உள்பட பலர் பாதி மொட்டை அடித்துக் கொண்டும், நெற்றியில் நாமம் போட்டும் நூதன முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதுகுறித்து அவர்கள், “எங்களது கோரிக்கை குறித்து தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போது வேலூர் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் பணிபுரிபவர்கள் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
கிராமிய தபால் ஊழியர்களுக்கு மத்திய அரசு மொட்டை போட பார்க்கிறதா? அல்லது நாமம் போட பார்க்கிறதா? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து மக்களுக்கு தெரியும் வண்ணம் நாங்கள் பாதி மொட்டை, நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.
