மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எச்.ராஜா.! உடல்நிலை எப்படி இருக்கு.? நேரில் நலம் விசாரித்த தமிழிசை
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

எச் ராஜாவும் பாஜகவும்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா, சமூக வலை தளத்திலும், பத்திரிக்கை வாயிலாகவும் தனது கருத்துகளை தெரிவித்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எச். ராஜா தமிழகத்தில் பாஜக போட்டியிடும் அனைத்து தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிட்டவர். ஆனால் அவருக்கு வெற்றி தான் கிட்டாமல் நழுவி சென்று கொண்டு உள்ளது.
பாஜகவில் எச்.ராஜாவிற்கு சீனியர்களாகவும், ஜூனியர்களாகவும் இருந்த இல.கணேசன், சி பி இராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டவர்களை மத்திய பாஜக அரசு ஆளுநராக பதவி கொடுத்து அழகு பார்த்த நிலையில், அடுத்ததாக எச் ராஜா தான் ஆளுநர் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் மத்திய அரசு இதுவரை எச். ராஜாவிற்கு அந்த பொறுப்பை வழங்காமல் காலம் தாழ்த்திக் கொண்டே வருகிறது.
எச்,ராஜாவிற்கு உடல்நிலை பாதிப்பு
இருந்த போதும் பாஜகவின் அறிவிக்கும் போராட்டங்கள், ஆர்பாட்டங்களில் முன்னனியில் கலந்து கொள்ளும் எச்.ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான காரைக்குடியில் இருந்து நேற்று சென்னை வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து எச் ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் அவர் அட்மின் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலம் விசாரித்த தமிழிசை
எச். ராஜாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை எடுத்து பாஜக நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எச். ராஜாவை நேரில் சந்தித்து உடல்நிலை விசாரித்தார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த தலைவர் சகோதரர் திரு.H.ராஜா அவர்களை சென்னை,அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தேன்.மருத்துவர்களிடம் அவரின் உடல்நலம் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தேன். அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்ற இறைவனை பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
பாஜகவுடன் கூட்டணி முறிவு..! அதிமுக பக்கம் திரும்பும் இஸ்லாமிய அமைப்புகள்- அதிர்ச்சியில் ஸ்டாலின்