குட்கா ஊழல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்பட 40-க்கு மேற்பட்ட இடங்களில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மேலும், இதுதொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேரை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்களை, காவலில் எடுத்து தனித்தனியாக விசாரிக்கின்றனர். இதில், பணம் பட்டுவாடா செய்யப்பட்டதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. இதில் தரகர்களாக செயல்பட்டது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர். 

இந்நிலையில், புழல் காவல் நிலையத்தில் உதவி கமிஷனராக இருந்த மன்னர்மன்னன், தற்போது மதுரை ரயில்வே உதவி கமிஷனராக பணியாற்றுகிறார். அவரது வீட்டிலும், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்துவதற்காக மன்னர் மன்னனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இதைதொடர்ந்து செங்குன்றம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத், தற்போது தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் செங்குன்றத்தில் இருந்தபோது, சென்னை ராயபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்தார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடு, இதுவரை காலி செய்யவில்லை. பணியிட மாற்றம் செய்து 6 மாதத்துக்கு மேலாகியும், வீட்டை காலி செய்யாததால் சிபிஐ அதிகாரிகள், அந்த வீட்டுக்கு சீல் வைத்தனர். தற்போது, இன்ஸ்பெக்டர் சம்பத்துக்கு, விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர், விசாரணைக்கு வரும்போது, ராயபுரத்தில் உள்ள வீட்டை அதிகாரிகள் சோதனையிட முடிவு செய்துள்ளனர். அங்கிருந்து பல ஆவணங்கள் கிடைக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.