கோவை சாலையில் விபத்தில் சிக்கிய சொகுசு கார்.! அவசரமாக காரை திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார், விபத்தில் சிக்கிய நிலையில் காரில் இருந்த இரண்டு பேர் தப்பி ஓடினர். இதனையடுத்து காரை போலீசார் சோதனைசெய்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
விபத்தில் சிக்கிய சொகுசு கார்
குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வசாதரணமாக கிடைத்து வருகிறது. இதன் காரணமாக இளம் தலைமுறையினர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போதைப்பொருட்களை தடை செய்துள்ளது. இருந்த போதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தி வரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பொள்ளாச்சி சாலையில் இருந்து கோவை நோக்கிசொகுசு கார், அதிவேகமாக வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சுந்தராபுரம் காந்தி நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடுவில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்து காரில் சிக்கியவர்களை மீட்க சென்றனர்.
மூட்டை, மூட்டையாக குட்கா
அப்போது காரில் இருந்த இரண்டு நபர்கள் வெளியே குதித்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் ஒன்றும் புரியாத அப்பகுதியை சேர்ந்த மக்கள் சுந்தராபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காரை சோதனையிட்டபோது காரைக்குள் பல லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து காரையும் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர். குட்கா பொருள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. எங்கே கொண்டு செல்லப்படுகிறது என போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்
மதுரை பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் பழிக்கு பழியாக வெட்டி படுகொலை