Gudka scam transfer to CBI
அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீதான குட்கா ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் குட்கா தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சியாளர்கள் மற்றும் காவல் துறையினரின் ஆதரவின்றி போதைப் பொருட்களை விற்பனை செய்வது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
குட்கா உரிமையாளர்களிடம் இருந்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தாக்கல் செய்த திமுக எம்எல்ஏ அன்பழகன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று கூறினார்.
