பெரம்பலூரில், மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டும் மாவட்ட ஆட்சியரின் அலட்சியத்தால் திங்கள்கிழமை தோறும் நிறைந்து காணப்படும் மக்கள் குறைதீர் கூட்டம் வெற்றிடமாக இருந்தது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொது மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில், திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கிராமப்புற மக்கள், சுய தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்து வருவர்.

இந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.

மனு எழுதுமிடத்திலும், மனுவை பதிவு செய்யும் இடத்திலும் பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியான மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகிய பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. நிகழாண்டு ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்களுக்கு போதுமான மழை இல்லாததால் பருத்தி, மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கோரியுள்ளனர்.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியமே இக்கூட்டத்திற்கு யாரும் வராததற்கு காரணம்.

பொது மக்களிடமிருந்து நேரிடையாக மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெறாததால் மனுக்களின் எண்ணிக்கையும், பொது மக்களின் கூட்டமும் குறைந்து வருகிறது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.