grenade in tasmac lorry
திருவாரூரில் மதுபானம் ஏற்றி வந்த லாரியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் அரசுக்கு சொந்தமான மதுபான கிடங்கு உள்ளது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மதுபாட்டில்கள் விநியோகிக்கப்படுவது வழக்கம். இதற்கிடையே தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் தனியாருக்குச் சொந்த லாரி மூலம் விளமல் மதுபான கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது.
லாரி நிறுத்தப்பட்டதும் மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டியை தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெட்டியில் விநோதமான பொருள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அப்பெட்டியை சோதனையிட்டதில் அதில் வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சக்திவாய்ந்த இந்த குண்டு வெடித்திருந்தால் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் மோகன்குமார், ராஜ்குமார் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுபான கிடங்கை தகர்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மதுபான கிடங்கிற்கு வந்த லாரியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டிருப்பது திருவாரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
