நீலகிரி

முதுமலை காட்டுப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பிக் காட்சியளிக்கின்றன. காட்டுப் பகுதியில் பசுமை திரும்பியதால், வறட்சியின்போது காட்டைவிட்டு போன காட்டு விலங்குகளும் திரும்பிவரத் தொடங்கியுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இங்கு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகள் வாழ்கின்றன.

இந்த காப்பகத்தில் கடந்த கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால் காட்டு விலங்குகள் குடிநீர் மற்றும் பசுந்தீவனங்கள் இல்லாமல் கடுமையாக பாதிக்கபட்டன.

குடிநீர் தேடி காட்டு விலங்குகள் வேறு காட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றன. மான் போன்ற சில காட்டு விலங்குகள் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலேயே இருந்தது. இதனால் அவை வறட்சி காரணமாக இறக்கும் அவலமும் ஏற்பட்டது. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகளும் இறந்தன.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியால் வறண்டு காணப்பட்ட நீர் நிலைகள் அனைத்திலும் நீர் நிரம்பி உள்ளது.

முதுமலையில் ஓடும் முக்கிய ஆறான மாயார் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், சிறுகுளங்கள் உள்ளிட்ட 150 நீர் நிலைகளும் முழுவதுமாக தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

முக்கிய நீர் நிலைகளான ஒம்பெட்ட, கேமட் போன்றவை நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.

மேலும், காட்டுப் பகுதியும் பசுமையாக காட்சி அளிப்பதால் காட்டு விலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனங்களும் அதிகரித்துள்ளன. இதனால் வறட்சி காலத்தில் வேறு காட்டுப் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்ற காட்டு விலங்குகள் மீண்டும் முதுமலை காட்டுப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.