graduate teachers demonstration in Dindigul emphasize ten-point demands ...

திண்டுக்கல்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜெகதீஷ்குமார் தலைமை வகித்தார். மகளிர் அணி செயலாளர் சாந்தி வரவேற்றார். 

மாநில செய்திதொடர்பு செயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் செல்மாபிரியதர்ஷன், பொருளாளர் பிரான்சிஸ் பிரிட்டோ உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "மாணவர் சேர்க்கை நிறைவுபெற்ற பின்னரே உபரி ஆசிரியர் பணியிடத்தை கணக்கிட வேண்டும். 

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவு இல்லாமல் நடத்த வேண்டும். 

2013-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு வழங்க வேண்டும்" உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.