மதுரையில் மது அருந்தி போதையில், ஏற்பட்ட கைகலப்பில் பட்டதாரியை கொலை செய்த, ஆட்டோ ஓட்டுநரை காவலாளர்கள் கைது செய்தனர்.

மதுரை கூடல்நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் முரளிதரன் சுந்தர் (43). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், தனது தாய்மாமன் மகளை 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து, சென்னையில் வசித்து வந்துள்ளார்.

குழந்தை இல்லாததால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியைப் பிரிந்து மதுரைக்கு வந்த முரளிதரன் சுந்தர், தனது தாய் விஜயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.

இங்கு வேலைக்குச் செல்லாமல் இருந்த முரளிதரன் சுந்தருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பாட்சாவுடன் (23) நட்பு ஏற்பட்டுள்ளது. அன்வர் பாட்சாவும் மனைவியைப் பிரிந்து வசித்து வந்துள்ளார்.

இரவு நேரங்களில் இவர்கள் இருவரும் அங்குள்ள தண்ணீர்த் தொட்டிப் பகுதியில் மது அருந்துவது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமை இரவும் இருவரும் மது அருந்தியுள்ளனர். மது போதை அதிகமான நிலையில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆத்திரம் அடைந்த அன்வர் பாட்ஷா, முரளிதரனை கீழே தள்ளி அவரது மார்பு மீது அமர்ந்து தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட முரளிதரன் சுந்தரை மயங்கி விட்டதாக நினைத்து, தண்ணீர்தொட்டி அருகே விட்டுவிட்டு அன்வர் பாட்ஷா சென்றுவிட்டாராம்.

திங்கள்கிழமை காலையில் முரளிதரன் சுந்தர் இறந்த செய்தியை அறிந்து அன்வர் பாட்ஷா தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து கூடல்புதூர் காவலாளர்கள் நடத்திய விசாரணையில், அன்வர் பாட்ஷா கொலை செய்தது தெரியவந்தது.

காவலாளர்கள் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த அன்வர் பாட்ஷாவை புதன்கிழமை கைது செய்தனர்.