govt polytechnic lecturer jobs scam

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதன் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியது. தேர்வு முடிவு வெளியான நிலையில், முடிவுகளைப் பார்த்தவர்கள், பெரும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். தங்களுக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது புகார் கூறியிருந்தனர்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. திருத்தி வெளியிடப்பட்ட பட்டியலைப் பார்த்தபோது பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை மீண்டும் ஸ்கேன் செய்ததில் மதிப்பெண்கள் 

குறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 130 மதிப்பெண் பெற்றிருந்தவர்கள் சுமார் 60 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், பணம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள அதிகாரிகளே தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்றும் தேர்வெழுதியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது குறித்து, விரிவான விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மைத் தன்மை வெளியாகும் என்றும் 

தேர்வெழுதியவர்கள் கூறியுள்ளனர். மேலும், இதில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.