அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் ஒரு தரப்பினர் மட்டுமே தற்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

எற்கனவே முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியுடன் அரசு ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து , சில அமைப்புகள் திட்ட மிட்டபடி நேற்று வேலை நிறுத்தத்தை தொடங்கின. இந்த வேலைநிறுத்தம் காரணமாக சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. சில இடங்களில் பாதிப்பு இல்லை என்ற நிலையே தற்போது உள்ளது.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகரன், மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறு ஏற்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே போதுமான அளவு ஊதியத்தை அரசு வழங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் மொத்த வருவாயையும் சம்பளம் வழங்குவதற்காக மட்டும் பயன்படுத்த முடியாது. மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் நிதி தேவைப்படுகிறது. கூடுதல் ஊதியம் பெறுவதற்காக வேலை நிறுத்தம் என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பது தவறு என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இடைக்கால தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்த வேறு வழிகளை கையாளலாம் என்றும் அதை விட்டுவிட்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தீர்வாக அமையாது என்று தெரிவித்தனர்.

சமுதாயத்தில் வழிகாட்டியாக திகழும் ஆசிரியர்களே போராடுவதை ஏற்கமுடியாது என்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் போராட்டத்தில் ஈடுபடுவது வருந்தத்தக்கத என்றும் அவர்களின் போராட்டம் பலதரப்பினரையும் பாதிப்படைய செய்யும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.