Asianet News TamilAsianet News Tamil

Governor RN Ravi: அவசரப்பட்டுடீங்களே முதல்வரே! இனவாதக் கருத்தை ஸ்டாலின் முன்வைப்பது மலிவானது! ஆளுநர் RN.ரவி!

தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரியை விட்டுப் பாடிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். ஆளுநர் ரவி, முதல்வரின் குற்றச்சாட்டை மறுத்து விளக்கமளித்துள்ளார்.

Governor RN Ravi responded to CM Stalin tvk
Author
First Published Oct 18, 2024, 8:12 PM IST | Last Updated Oct 18, 2024, 8:13 PM IST

சென்னை சேப்பாக்கம் டிடி அலுவலகத்தில் இந்தி மாதம்  கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைகாட்சி பொன்விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரியை விட்டு பாடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு  எதிராக கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என காட்டாக தெரிவித்திருந்தார். தமிழத்தாய் வாழ்த்து பாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார். 

இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் நீக்கம்! CM போட்ட ஒரே போடு! ஆளுநர் மாளிகை விளக்கமும் DD தமிழ் மன்னிப்பும்!

இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். #பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.

ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு  அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.  தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios