Governor Ravi : திமுக அரசு மீது இபிஎஸ், அண்ணாமலை அடுத்தடுத்து புகார்.. அதிரடியாக டெல்லி கிளம்பிய ஆளுநர் ரவி
கள்ளச்சாராய அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில், திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆளுநர் ரவியிடம் அடுத்தடுத்து புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இன்று ஆளுநர் ரவி உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து அடுத்தடுத்து 61 பேர் உயிரிழந்துள்னர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அலர்ட்டான தமிழக அரசு கள்ளச்சாரயத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வனப்பகுதிக்குள் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை கண்டறிந்து கைது செய்தது. மேலும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். எஸ்.பி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
ஆளுநரிடம் புகார்
ஆனால் தமிழக அரசு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியது. திமுக அரசுக்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக விஷச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விஷச்சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக சந்தித்து திமுக அரசு மீது புகார் கொடுத்தனர். கள்ளச்சாராய விவகாரத்தில் திமுகவினருக்கு உள்ளதொடர்பு குறித்தும் விசாரணை செய்ய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு கொடுத்தனர். ஆளுநர் ரவியும் தமிழக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
டெல்லிக்கு புறப்பட்ட ஆளுநர் ரவி
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆளுநர் ரவி இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு தமிழகத்தில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனை, கள்ளச்சாராய மரண விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளிப்பார் என கூறப்படுகிறது. மேலும் 3வது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரை மரியாதை நிமித்தமாக ஆளுநர் ரவி சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் ரவியின் பதவிக்காலம் அடுத்தமாதம் முடிவடையவுள்ள நிலையில், பதவி நீட்டிப்பு அல்லது வேறு முக்கிய பதவிகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.