விழுப்புரம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளனம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
 
விழுப்புரம் மாவட்டம், அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளனம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பணியாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.துரைராஜ் தலைமை வகித்தார். வேலூர் மண்டலத்தின் பொதுச் செயலாளர் தண்டபாணி, மாநில இணைச் செயலர் கோமகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல பொதுச் செயலர் எஸ்.லோகநாதன், ஓய்வுபெற்றோர் அமைப்பின் மண்டலச் செயலர் மணி, கடலூர் மண்டல செயலர் ராஜாமணி, வேலூர் மண்டலத் தலைவர் எஸ்.சீனுவாசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

"அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு கடந்த 2016-செப்டம்பர் முதல் 2.57 காரணி சம்பள உயர்வை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு இதனை கணக்கிட்டு வழங்க வேண்டும்.
 
ஓய்வூதியத்திலும், ஒப்பந்த உயர்வுகளை அமல்படுத்த வேண்டும்.

பஞ்சப்படி நிலுவைகளை உடனே சரி செய்திட வேண்டும்.
 
அரசு ஊழியர்களைப் போல போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு, இறப்பு நிவாரணம் வழங்க வேண்டும்.

கல்வித் தகுதிக்கு ஏற்ப வாரிசு நியமனத்தை அமல்படுத்த வேண்டும்.
 
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அனைவரும் இணைக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தினர், ஓய்வு பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.