ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கதில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வுசெய்ய கமிட்டி அமைக்கபட்டு ஒரு ஆண்டு ஆகியும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் மீண்டும் போராட்டம் அறிவிப்பது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் சங்கங்கள் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூடி முடிவு எடுத்தனர்.

அதன்படி ஜுலை 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டங்களூம், ஜூலை 18ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்  ஆகஸ்ட் 5ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலை ஜூலை 13 மற்றும் ஜூலை 18 ஆகிய தேதிகளில் திட்டமிட்ட படி வெற்றிகரமாக போராட்டம் நடத்தபட்டது. இன்று கோட்டையை நோக்கி போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு ஊழியர்கள் நேற்று இரவு முதல் சென்னையை நோக்கி வர தொடங்கினார்கள்.அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் நிலையில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் வந்த வண்டிகளை காவல்துறை தடுத்து நிறுத்தியது. 

காவல்துறையில் தடையை மீறி சென்னை சேப்பாக்கதில் பல்லாயிரகணக்கான அரசு ஊழியர்கள் ஒன்று கூடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.