government sand quarry siege police came to protect on night

கடலூர்

அரசு மணல் குவாரி அமைய உள்ள இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்ததை தொடர்ந்து இரவோடு இரவாக அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது. 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள மருதாடு, வான்பாக்கம், திருக்கண்டேஸ்வரம் பகுதி தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். 

மேலும், மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வான்பாக்கம் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் வேல்முருகன் தலைமையில் "தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி அமைய உள்ள இடங்களை முற்றுகையிட்டு போராட்டம்" நடத்துவது என முடிவு செய்திருந்தனர். 

அதன்பின்னர் மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரிகள் அமைய உள்ள இடங்களை நேரில் பார்வையிட்டனர். 

இதுபற்றி நெல்லிக்குப்பம் காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தனர்.

அதன்படி இரவோடு இரவாக நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 25–க்கும் மேற்பட்ட காவலாளர்கள் வான்பாக்கம், மருதநாடு, திருகண்டேஸ்வரம் ஆகிய கிராமங்களில் மணல்குவாரி அமைய உள்ள இடத்தில் குவிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.