சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்துக்கு சென்ற இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இதனால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்டம் உப்போடை பகுதியைச் சேர்ந்த அம்சவல்லி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை 9 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, உறவினர்கள், அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். 

காலை முதல் வலியால் துடித்து வந்த அம்சவல்லிக்கு இரவு 8 மணிக்கு மேல்தான் சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். குழந்தை பிறந்த பின்னர் அதீத உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காத்தால், அம்சவல்லி பரிதாபமாக இறந்தார் என தெரிகிறது. 

மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் அம்சவல்லி உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசாரும், டாக்டர்களும் சமரசம் பேசினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.