அரியலூர்

அரியலூரில் உள்ள செயங்கொண்டம் அரசு மருத்துவமனை 47 ஆண்டுகள் ஆகியும் தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால் நவீன உபகரணங்களுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், செயங்கொண்டம் உள்பட அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலர் மருத்துவ சேவையைப் பெற்று வருகின்றனர்.

ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல், விஷக்கடி, இருமல் மற்றும் விபத்தில் ஏற்பட்ட காயங்கள் உள்ளிட்டவற்றுக்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மருத்துவமனை முதலில் ஓட்டு கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்பிறகு, இதனை இடித்துவிட்டு அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தரம் உயர்த்தி கான்கிரீட் கட்டிடம் 1971-ல் கட்டப்பட்டது. இந்த நிலையில் 47 ஆண்டுகள் ஆகியும் மருத்துவமனை தரம் உயர்த்தப்படாமல் 148 படுக்கை வசதிகள் மற்றும் குறைவான மருத்துவர்களை மட்டுமே கொண்டு இன்றுவரை இயங்கி வருகிறது.

பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப செயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டி விரிவுபடுத்தப்படாததால் போதிய படுக்கை வசதியில்லாமல் உள்நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், போதிய மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், ஆர்த்தோ மருத்துவர்கள், செவிலியர்கள், கண் மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர், மயக்க நல மருத்துவர், ஆய்வக நுட்புநர் இல்லை. மருத்துவ உபகரணங்கள், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள், இரத்த ஆய்வகம், சி.டி.ஸ்கேன், குடல் உள் நோக்கி கருவி, பிணவறையில் குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவைகளும் இல்லை.

விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்படுவோரை மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர், திருச்சி அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அங்கு கொண்டுசெல்வதற்குள் அவர்கள் இறந்துவிடுகின்றனர். மேலும், மருத்துவமனையின் கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது.

கட்டடத்தின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே, மருத்துவமனை கட்டிடத்தை புனரமைக்க வேண்டும். மேலும், புதிய கட்டடங்களை கட்டி மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும்.

நவீன உபகரணங்களுடன் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.