ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட 1186-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசு தரப்பில் பல்வேறு எச்சரிக்கை விடுத்த போதிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்ததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் 1186-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வந்தனர். 

இதனையடுத்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை அடுத்து 1186 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்பட உள்ளோரில் 577 பேர் துவக்க பள்ளி ஆசிரியர், 609 பேர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அடங்குவர். 

17-பி நடவடிக்கை ரத்து இல்லை

அரசு ஊழியர்கள் மீது விதி உண் 17-பி.யின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீதான ஒழுங்கு நடவடிக்கையும் ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.