3 அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து தமிழக அரசு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 61 துறைகளை சேர்ந்த அரசு துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மே 2 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் எனவும் அரசு ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து எடப்பாடி அரசு தங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை தொடருவோம் என அரசு ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், உதயகுமார் ஆகியோருடன் அரசு ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில், அரசு ஊழியர் சங்கத்தின் 6 கோரிக்கைகளை வரும் ஜூலை இறுதிக்குள் நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்துள்ளது.

இதைதொடர்ந்து அரசு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.