Government Employees indefinite strike stopping successfully
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நேற்றுத் தொடங்கியது.
“புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,
புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்,
சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்” உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் நேற்று இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அனைத்து துறை ஊழியர்கள் சங்கத்தினரும் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, பேரூராட்சித்துறை, வணிக வரித்துறை, பொது சுகாதாரத்துறை, மோட்டார் வாகன பராமரிப்புத்துறை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர், வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஊழியர்கள் இல்லாததால் அலுவலகங்கள் வெறிச்சோடின. அதிலும் வருவாய்த் துறையினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் வருவாய்த்துறைப் பணிகள் முற்றிலும் பாதிப்படைந்தன.
