- Home
- Tamil Nadu News
- சென்னை
- குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?
குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?
சென்னை மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பயண அட்டை பெறும் பயணிகளுக்கு 'சென்னை ஓன்' செயலி மூலம் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரூ.1000 மற்றும் ரூ.2000 மாதாந்திர பயண அட்டைகளை வாங்கினால்ரூ.50 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.50 கேஷ்பேக்.

மாநகர போக்குவரத்து கழகம்
மாநகர போக்குவரத்து கழகம் (MTC) என்பது சென்னை மாநகரிலும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பேருந்து சேவைகளை வழங்கி வருகிறது. இப்பேருந்து மூலம் தினமும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என தினமும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணடைந்து வருகின்றனர். இவர்களில் 70,000 பேர் வரை விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ.1000 மற்றும் ரூ.2000 மாதாந்திர பயணச்சீட்டின் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். அதாவது ரூ. 1,000 பாஸ் என்பது சாதாரண மற்றும் விரைவுப் பேருந்துகளில் செல்லுபடியாகும். அதேபோல் ரூ. 2,000 பாஸ் ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பயணிக்கலாம்.
டிஜிட்டல் பரிவர்த்தனை
இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சார்பில் சென்னை ஓன் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலில் ரூ.1000 மற்றும் ரூ.2000க்கான மாதாந்திர பயண அட்டைகளை பெறும் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை ஓன் (Chennai One) என்ற செயலியின் மூலம் ரூ.1000 மற்றும் ரூ.2000க்கான மாதாந்திர பயண அட்டைகளை பெற்றால் ரூ.100 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 சலுகை
ரூ.50 உடனடி விலை குறைப்பாகவும், ரூ.50 யுபிஐ மூலம் பரிவரத்தனை செய்பவர்களுக்கு கேஸ்பேக் முறையில் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒன்' செயலி மூலம் பாஸ் பெறுவது எப்படி?
பயணிகள் மாதாந்திர பயண அட்டைகளை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் மொபைலில் 'சென்னை ஒன்' (Chennai One) செயலியைப் பதிவிறக்கம் செய்து லாகின் செய்யவும். மெனுவில் உள்ள ('Passes' அல்லது 'Monthly Pass') என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். உங்களது ஆதார் அல்லது அடையாளச் சான்று விவரங்களை உள்ளிடவும். பாஸ் வகையைத் தேர்ந்தெடுத்து, யு.பி.ஐ. மூலம் பணத்தைச் செலுத்தவும். உடனடியாக உங்கள் மொபைலில் டிஜிட்டல் பாஸ் வந்துவிடும்.

