அரசாணை 56-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்...
அரசாணை 56-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பெரம்பலூரில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
அரசாணை 56-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பெரம்பலூரில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரம் பகுதியில் எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து இந்தப் போராட்டம் தொடங்கியது.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தயாளன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குமரி ஆனந்தன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநிலச் செயலாளர் பெரியசாமி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்தப் போராட்டத்தின்மூலம், "வேலைக்காக ப் பதிவுச் செய்துவிட்டு காத்திருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும்;
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆதிஷேசய்யா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர் சீரமைப்புக் குழுவை உடனே கலைக்க வேண்டும்;
மதிப்பூதியம், தொகுப்பூதியம், வரையறுக்கப்படாத காலமுறை ஊதியம், ஒப்பந்தப் பணி நியமனம், தினக்கூலி முறை போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும்;
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆளவந்தான், மாவட்டத் துணைத் தலைவர்கள் இளங்கோவன், செல்வப் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டத் தணிக்கையாளர் ராஜராஜன் நன்றிக் கூறிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.