ஆம்னி பேருந்துக்கு போட்டியாக களம் இறங்கும் அரசு சொகுசு பேருந்துகள்; கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் தகவல்
தனியார் பேருந்துகளுக்கு இணையாக பல்வேறு நவீன வசதிகளுடன் அரசுப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், தற்போதைக்கு கட்டண உயர்வு இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்த பேருந்துகளில் செல்போனுக்கு சார்ஜ் போடும் வசதி உள்பட பல்வேறு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக போக்குவரத்துக் கழக அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
திமுக அரசு என்னை கொலை செய்ய பார்க்கிறது; நீதிமன்ற வாசலில் சாட்டை துரைமுருகன் குமுறல்
அப்போது அவர் கூறுகையில், தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகின்றனர். தற்போது 600க்கும் மேற்பட்டோர் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக 7 ஆயிரத்து 500 பேருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அப்படி இருக்கும் சூழலில் போக்கு வரத்துக் கழகத்தை தனியார் மயமாக்க நினைக்கிறோம் என்று எப்படி கூற முடியும்?
அரசுப் பேருந்துகளில் வழங்கப்படும் இலவசப் பயணங்களுக்காக முதல்வர் நிதி ஒதுக்கி வருகிறார். அந்த வகையில் நடப்பாண்டு ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றுபவர்கள் 1ம் தேதி சம்பளம் பெற முடிகிறது. பிற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை தற்போதைக்கு உயர்த்தக் கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தற்போதைய சூழலில் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.