Government employees helping doctors protest Announcement on May 5

மருத்துவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மே 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நேற்றோடு முடிவடைந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், மற்றும் சுப்பிரமணியன் இரு வேறு மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.

மருத்துவ கவுன்சில் விதிப்படி புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி சுப்ரமணியனும், 50 % இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாக நீதிபதி சசிதரனும் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதில் முதுநிலை பட்ட படிப்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டது.

இந்நிலையில், மருத்துவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மே 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகள் முன் ஆர்பாட்டம் நடைபெறும் எனவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.