Government doctors continue to fight for 13th day on reservation

ஈரோடு

இடஒதுக்கீடு வேண்டி ஈரோடு அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் இருக்கும் மருத்துவர்கள் 13-வது நாளான நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 13-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் நாள்தோறும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 20–ஆம் தேதி முதல் மருத்துவர்கள் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக அரசு மருத்துவர்கள் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழக அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் ரவிசந்திரபிரபு கூறியது:

“மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் கடந்த மாதம் 18–ஆம் தேதி முதல் விடுப்பு எடுத்துப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஒன்றியத்திற்கு ஒரு மருத்துவர் வீதம் 14 ஒன்றியங்களில் 14 மருத்துவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து வருகிற 5–ஆம் தேதியும், 6–ஆம் தேதியும் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்.

இதில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து 100–க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பார்கள்” என்று அவர் கூறினார்.