Asianet News TamilAsianet News Tamil

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தராமல் இழுத்தடித்ததால் அரசு பேருந்து பறிமுதல்…

government bus was confiscated because did not pay compensation to victims family
government bus was confiscated because did not pay compensation to victims family
Author
First Published Aug 10, 2017, 7:50 AM IST


பெரம்பலூர்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தராமல் இழுத்தடித்ததால் பெரம்பலூர் நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்தை பறிமுதல் செய்தனர். 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா சித்தளி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜா (35). கடந்த 2013-ஆம் ஆண்டு இவர், திருச்சி சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்துச் சென்றார்.

திருச்சி சிறுகனூர் அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து திடீரென ராஜா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அதற்கான இழப்பீட்டை வழங்கக்கோரி ராஜாவின் மனைவி பூபதி (29) பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 25.3.2013-ல் வழக்குத் தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, “ரூ.15 இலட்சத்து 26 ஆயிரத்தை ராஜாவின் குடும்பத்திற்கு திருவண்ணாமலை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும்” என கடந்த 30.10.2014-ல் தீர்ப்பு வழங்கினார்.

இதனிடையே இழப்பீட்டுத் தொகையை குறைக்ககோரி திருவண்ணாமலை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

பின்னர் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், “ரூ.10 இலட்சத்து 75 ஆயிரத்தை இழப்பீடாக ராஜாவின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும்” என அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை பூபதி தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி பாலராஜமாணிக்கம், ராஜாவின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடிப்பதால் பெரம்பலூருக்கு வரும், திருவண்ணாமலை கோட்ட அரசு பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், வட்டியுடன் சேர்த்து ரூ.14 இலட்சத்து 54 ஆயிரத்து 427-ஐ அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டார்.

அதன் பேரில் வேலூரில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக திருச்சி நோக்கிச் செல்ல இருந்த பேருந்தை நேற்று நீதிமன்ற ஊழியர்கள் பெரம்பலூரில் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த பேருந்து பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios