Asianet News TamilAsianet News Tamil

பரோட்டாவுக்காக அரசு பேருந்து ஓட்டுநர் கொலை; கைது செய்யப்பட்ட கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்…

Government bus driver killed for parota murderers gave statement to Police
Government bus driver killed for parota murderers gave statement to Police
Author
First Published Aug 2, 2017, 6:56 AM IST


கன்னியாகுமரி

பூதப்பாண்டியில் பரோட்டாவுக்காக ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்து ஓட்டுநரை கல்லால் தாக்கி கொன்றோம், அவரது தந்தையையும் சரமாரியாக தாக்கினோம் என்று அவரை கைது செய்யப்பட்ட கொலையாளிகள் இருவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் கீரங்குளத்தைச் சேர்ந்தவர் ஏசுமணி (70). இவருடைய மகன் காட்வின் (42). அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 30–ஆம் தேதி இரவு காட்வினும், ஏசுமணியும் குறத்தியறை பகுதியில் சாலையோரம் படுகாயங்களுடன் கிடந்தனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்து இருவரையும் மீட்டு பூதப்பாண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே காட்வின் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஏசுமணி மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக பூதப்பாண்டி காவலாளர்கள் விபத்தில் காட்வின் இறந்ததாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஏசுமணிக்கு மயக்கம் தெளிந்து நினைவுத் திரும்பியது. அவர் மருத்துவமனைக்கு வந்த உறவினர்களிடம் தன்னையும், மகனையும் சிலர் சேர்ந்து தாக்கியதாகவும், அதில்தான் படுகாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் இருவரையும் தாக்கியவர்களின் பெயர் மற்றும் அடையாளத்தையும் தெரிவித்தார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இந்தத் தகவலை பூதப்பாண்டி காவலாளர்களுக்குத் தெரிவித்தனர்.

மேலும், நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர். அத்துடன் நேற்று முன்தினம் மாலை கடுக்கரை சந்திப்பில் உறவினர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த உயர் காவல் அதிகாரிகள் மற்றும் நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் கோபி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, காட்வின் விபத்தில் இறக்கவில்லை. இதற்கு பின்னணியில் மர்மம் இருப்பதை புரிந்து கொண்டனர் காவலாளர்கள். அதனடிப்படையில் விசாரணையை தொடர்ந்து நடத்த தனிப்படை காவலாளர்களுக்கு உத்தரவிட்டார் துணை காவல் கண்காணிப்பாளர் கோபி.

பின்னர் தனிப்படை காவலாளர்கள் காட்வின் மரணம் குறித்து விசாரித்ததில் பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாத்தியைச் சேர்ந்த அமலன் (22), சுதீர் (30), விஜயன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அமலன், சுதீர் ஆகியோரை இரவோடு இரவாக தனிப்படை காவலாளர்கள் பிடித்தனர். பின்னர், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்ததில் இவர்கள் தாக்கியதில்தான் காட்வின் பலியாகி இருப்பது உறுதியானது. இதையடுத்து காவலாளர்கள் கொலை வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அமலன் காவலாளர்களிடம் அளித்த வாக்குமூலம்:

“சுதீர் பொக்லைன் உரிமையாளராக உள்ளார். நான் அவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். சம்பவத்தன்று நான் பரோட்டா பார்சல் வங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன்.

வீட்டில் சென்று பார்த்தபோது பரோட்டா பார்சலை காணவில்லை. வழியில் அது விழுந்திருக்கலாம் என்று கருதி நான் பார்சலை தேடி வந்த வழியே திரும்பிச் சென்றேன்.

அப்போது குறத்தியறை பாலர்பள்ளி அருகே ஏசுமணி ஒரு பார்சலை கையில் வைத்து பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அந்த பார்சலை வழியில் இருந்து எடுத்தீர்களா? என்று கேட்டேன். இதில் அவருக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான், அவரை தாக்கினேன்.

காயமடைந்த அவர் அலறினார். சத்தம் கேட்டு அவரது மகன் காட்வினும், அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரும் ஏசுமணிக்கு ஆதரவாக என்னிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் என்னை அடித்தனர்.

இதுபற்றி நான், பொக்லைன் உரிமையாளர் சுதீருக்கு செல்போனில் தகவல் கொடுத்தேன். சிறிது நேரம் கழிந்து அவரும், விஜயனும் அங்கு வந்தனர். அப்போது, ஏசுமணியும், காட்வினும் மட்டுமே இருந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதால், நாங்கள் காட்வினையும், ஏசுமணியையும் சரமாரியாக தாக்கினோம்.

காட்வினை கல்லால் அடித்தோம். அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே, அவரது மோட்டார் சைக்கிளை அவர் அருகே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றோம்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய விஜயனை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios