Government bus driver joined gave duplicate educational certificates
கரூர்
போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்து கைது செய்ய உள்ளதை அறிந்தவர் ஒரு வாரமாக பணிக்கு வராமல் தலைமறைவாகி உள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே கனமாத்தம்பட்டியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு கரூர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிக்குச் சேர்ந்தார்.
கல்யாண சுந்தரத்தின் கல்வி சான்றிதழை அதிகாரிகள் சோதனையிட்டபோது அது போலி சான்றிதழ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கரூர் திருமாநிலையூர் போக்குவரத்து கழக பணிமனையின் நிர்வாக அதிகாரி பிலிப் ஜான்பீட்டர் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் ஓட்டுநர் கல்யாணசுந்தரம் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையில் கல்யாணசுந்தரம் மோசடி செய்து பணிக்குச் சேர்ந்தது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள், “கல்யாணசுந்தரத்தின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் போலியாக உள்ளது. பணிக்கு சேர்ந்தபோது இந்த சான்றிதழ்களை அவர் கொடுத்துள்ளார். ஊழியர்களின் சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
கல்யாணசுந்தரம் கடந்த ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை. போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்த விவரத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்களோ? என கருதி அவர் வரவில்லை என்று தெரிகிறது. காவலாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை கைது செய்வார்கள்” என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
