புதுக்கோட்டை அருகே தமிழக ஆளுநர் வந்த கார் மீது அரசு பேருந்து மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உயிர் தப்பினார். அவர் வேறு கார் மூலம் திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக நேற்று காலை திருச்சி வந்தடைந்தார். புதுக்கோட்டையில் நேற்று ஆய்வு பணிகளை முடித்துவிட்டு, மாலை, 4:40 மணிக்கு இன்னோவா காரில் சென்றுக்கொண்டிருந்தார். அவரது காருக்கு வழக்கம்போல முன்னாலும், பின்னாலும் போலீஸ் வாகனங்கள் புடைசூழ ஆளுநரின் ‘கான்வாய்’ திருச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தது.

இந்நிலையில் திருக்கோகர்ணம் அருகே முத்துடையான்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற ஒரு அரசு பேருந்து யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஆளுநரின் காரின் வலதுபக்க கதவில் லேசாக உரசியது. மேலும் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. இதில் அந்த பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. ஆனால் ஆளுநருக்கோ காரை ஓட்டிய டிரைவருக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஆளுநர் உயிர் தப்பினார். 

உடனடியாக ஆளுநரின் கார் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. கான்வாயில் வந்த வேறு காரில் ஆளுநரை ஏற்றி பாதுகாப்பு அதிகாரிகள் அவரை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். ஆளுநரின் கார் மீது மோதிய அரசு பேருந்து ஓட்டுநனர் மற்றும் நடத்துனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, வேறு பேருந்து மூலம் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.