Gopala krishna gandhi speak about vice president election
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஒரு சாதாரண இந்திய குடிமகனாகத்தான் நிற்பதாகவும், மகாத்மா காந்தியின் பேரனாக இல்லை என்றும் கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. . இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் கடந்த 4-ம் தேதி முறைப்படி வெளியிட்டது.
மேலும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 ஏதிர்கட்சிகளின் சார்ப்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து நேற்று தமிழகம் வந்த கோபால கிருஷ்ண காந்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தான் காந்தியின் பேரனாக குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், சாதாரண ஒரு இந்திய குடிமகனாகத்தான் போட்டியிடுகிறேன் என்றும் கூறினார்.
காந்தியின் பேரன் என்று தான் ஓட்டு கேட்க விரும்பவில்லை என்றும் அப்படி கேட்பது கேவலம் என்றும் கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்ததாகவும், அவர்கள் ஆதரவு அளித்ததற்கு நன்றி என்றும் அவர் கூறினார்.
தன்னை ஆதரிக்க வேண்டும் என்று அதிமுகவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறிய கோபால கிருஷ்ண காந்தி, பாஜக ஆதரித்தால் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
