மதுரை ஆதீன மடத்துக்கு நல்ல இளவரசர் வருவார் என்றும் எங்கோ ஓரிடத்தில் இருக்கும் அவர், வரவேண்டிய நேரததில் கட்டாயம் வருவார் என்றும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

மதுரை ஆதீன மடத்துக்கு இளைய ஆதினமாக சில ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தம் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள், பிரச்சனைகளால், நித்யானந்தா மடத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தான் மீண்டும் மடத்துக்குள் நுழைய அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரை ஆதின மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை வித்தித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், மதுரை ஆதீனம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நித்யானந்தா இனிமேல் மதுரை ஆதீன மடத்துக்குள் வர முடியாது என்றார். அவரால் இனி எந்தப் பிரச்சனையும் வராது. எப்போதும் போல் மடத்தில் சிறப்பு குறையாமல் பூஜைகள் நடக்கின்றன.

இந்த மடத்துக்கு இளைய ஆதீனம், நியமனம் பற்றிய நிலை தற்போது எதுவும் எழவில்லை என்றும் இந்த மடத்திற்கு நல்ல இளவரசர் வருவார் என்றும் எங்கோ ஓரிடத்தில் இருக்கும் அவர், வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார் என்று கூறினார்.