மயிலாப்பூர் ஓட்டலில் நடந்த சோதனையில் 7 கிலோ தங்கம், ரூ.11 கோடி ஆகியவற்றை மத்திய வருவாய் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மயிலாப்பூரில் உள்ள பிரபல ஓட்டலில், வெளிநாட்டினரிடம் தங்க கடத்தலில் ஈடுபடுவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாப்பூரில் உள்ள பிரபல ஓட்டல்களை, போலீசார் மாறுவேடத்தில் சென்று நேற்று முன்தினம் முதல் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, ஒரு குறிப்பிட்ட ஓட்டலை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அந்த ஓட்டலின் பார்க்கிங் பகுதிக்கு சென்ற தொழிலதிபர், கையில் ஒரு பையை வைத்திருந்தார். உடனே போலீசார், அவரை சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, செய்தபோது, அதில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள 6 தங்க கட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர்.

தொடர்ந்து அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், அதே ஓட்டலில் தங்கியுள்ள வெளிநாட்டை சேர்ந்த கடத்தல்காரர்களிடம் தங்க கட்டிகளை வாங்கியதாக கூறினார். இதையடுத்து, அங்கு அறையில் அங்கியிருந்த கொரியாவை சேர்ந்த 2 பேரை, போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஒரு நாள் முன்னதாக தென் கொரியாவில் இருந்து விமானம் மூலம் வந்துள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் எடுத்து வந்ததாக தெரிவித்தனர்.  அவர்களையும் கைது செய்த அதிகாரிகள், துருவி துருவி விசாரிக்க தொடங்கினர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது துணிக்கடை உரிமையாளர் ஒருவரிடம் இருந்து ஒரு கிலோ தங்க கட்டியையும், ரூ.5.16 கோடியையும் பறிமுதல் செய்தனர்.  அங்கு வேலை செய்பவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியபோது, அங்கு பதுக்கி வைத்து இருந்த ரூ.6 கோடியை பறிமுதல் செய்தனர்.

அதே போல் தங்கக்கட்டி, ஹவாலா பணப் பரிமாற்றத்துக்கு உதவியாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தபட்ட ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.