விமானத்தில் ரூ.62 லட்சம் தங்கத்தை கடத்தி வந்த ஆசாமியை, சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்கு உடந்தையாக இருந்த விமான நிறுவன ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ரியாத்தில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று காலை 9 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து, அனுப்பிவிட்டனர். பின்னர், அடுத்த விமான்தில் வரும் பயணிகளை சோதனை செய்ய தயாராக இருந்தனா்.

 

அப்போது, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர் முகமது ஹாசம் (27) என்பவர், பதற்றத்துடன் அவசர அவசரமாக, குடியுரிமை சோதனை நடக்கும் பகுதியில் இருந்து, தரைதளத்தில் இறங்கி வெளியே சென்றார். பின்னர், அவர் போர்டிகோவில் நின்று, யாரையோ தேடி கொண்டிருந்தார். இதை கவனித்த சுங்க அதிகாரிகளுக்கு, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள், முகமது ஹாசமிடம் சென்று விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை, சுங்க அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

 

தொடர்ந்து அவரது பேன்ட் பாக்கெட்டை சோதனை செய்தபோது, பெரிய அளவில் செல்போன் கவர் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, அதனுள் செல்போனுக்கு பதில் 2 கிலோ எடையுள்ள 3 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.62 லட்சம். அதனை பறிமுதல் செய் அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரித்தனா்.

அதில், ரியாத்தில் இருந்து வந்த விமானத்தில், ஒரு பயணி வந்துள்ளார். அவர், தார். முகமது ஹாசமிடம் செல்போன் கவரை கொடுத்து, அனைத்து சோதனைகளையும் முடித்து கொண்டு வெளியே செல்லும்போது வாங்கி கொள்வதாக கூறினார்.

 

முகமது ஹாசம், செல்போன் கவர்தானே என நினைத்து வாங்கி கொண்டார். ஆனால், சோதனைகள் முடிந்த பிறகு, அந்த பயணியை காணவில்லை. அதனால், அவரை தேடியதாக கூறியுள்ளார்.

அவரது பேச்சில் அதிகாரிகளுக்கு நம்பிக்கை இல்லை. கடத்தல் ஆசாமியிடம் பேசி, அனைத்து சோதனையும் முடித்து கொண்டு வந்தால், தங்கத்தை தருகிறேன் என முகமது ஹாசம் கூறியுள்ளார். அந்த ஆசாமி, முகமது ஹாசமுக்கு நன்கு பழக்கமானவராக இருக்க முடியும்.

 

அதனால், 62 லட்சம் தங்கத்தை கொடுத்துள்ளார். முகமது ஹாசம், அதிகாரிகளிடம் சிக்கி கொண்டதை அறிந்ததும், அவர் தப்பிவிட்டார் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதைதொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களை அதகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், 50 வயது மதிக்கத்தக்க ஆசாமி, முகமது ஹாசமிடம் செல்போன் கவரை கொடுத்துவிட்டு சென்றது பதிவாகி இருந்தது. அவரை, அதிகாரிகள் வலைவீசி தேடிவருகின்றனர்.

 

வெவ்வேறு சம்பவத்தில், ஒரே நாளில் கடத்தல் ஆசாமிகளுக்கு உடந்தையாக இருந்த 2 ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.