பத்மஸ்ரீ விருதை தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்… மாரியப்பன் பேட்டி நெகிழ்ச்சி பேட்டி!

பத்மஸ்ரீ விருது தனது தாயாருக்கு சமர்ப்பிப்பதாக பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான, மத்திய அரசின் கவுரவமிக்க விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பெறுபவர்களில் 8 பேர் விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள்.

இதில் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு இந்தாண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது கிடைத்த தகவல் அறிந்ததும் மாரியப்பனுக்கு அவருடைய பெற்றோர், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், தனக்கு கிடைத்துள்ள விருது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இளம் வயதில் மிக உயரிய விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினார்.

இந்த விருதால், தனது பெற்றோர், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தன்னை இந்த விருது வாங்கும் அளவிற்கு ஊக்கப்படுத்தி உயர்த்திய தனது தாயார், பயிற்சியாளர் மற்றும் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக மாரியப்பன் கூறினார்..

இந்த பத்மஸ்ரீ விருதை தாயார் சரோஜா, பயிற்சியாளர் சத்தியநாராயணன் மற்றும் இந்தியாவிற்கு சமர்ப்பிக்கிறேன் என்றும், விரைவில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது அடுத்த லட்சியம் என்றும் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இதற்காக நான் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஒவ்வொருவரும் தம்மால் முடியாது என்று நினைக்க கூடாது.

முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றும் மாரியப்பன் குறிப்பிட்டுள்ளார்.