Gold coin gift for elderly You can also win it

திருச்சி

மக்காத குப்பைகளை பிரித்து மாநகராட்சி பணியாளரிடம் வழங்கினால் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் முதியவர் ஒருவருக்கு நேற்று தங்க நாணயம் பரிசாக வழங்கினார் திருச்சி மாநகராட்சி ஆணையர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சியைக் குப்பை இல்லாத நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதனொரு பகுதியாக கடந்த ஜூன் 5–ஆம் தேதி முதல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள வீடுகளில் புதன்கிழமை தோறும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் போன்ற மக்காத குப்பைகளைப் பிரித்துத் தனியாக வாங்கப்பட்டு வருகிறது.

மக்கும் குப்பைகள் வீடுகளில் தினந்தோறும் சேகரிக்கப்பட்டு வருகிறது. மக்காத குப்பைகளை முறையாக மாநகராட்சித் துப்புரவு பணியாளர்களிடம் வழங்கும் மக்களை ஊக்கப்படுத்த “தங்க நாணயம்” பரிசு திட்டத்தையும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, மக்காத குப்பைகளை மாநகராட்சி பணியாளரிடம் வழங்கும் மக்கள் அதனை தங்களது செல்போனில் படம்பிடித்து ‘வாட்ஸ் அப்’ மூலம் 84894 44400 என்ற எண்ணிற்கு ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிக்குள் மட்டும் அனுப்ப வேண்டும்.

இப்படி அனுப்பப்படும் படங்கள் அனைத்தும் கணினி மூலம் குலுக்கல் நடத்தப்பட்டு அதிர்ஷ்டசாலி நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் நேற்று அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி 12-வது வார்டு வள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.

மக்களிடையே குப்பைகளை பிரித்தறியும் விழிப்புணர்வை இது ஏற்படுத்தும் என்று இதில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.