பர்னிச்சர் கடை பெண் உரிமையாளரிடம் ஒன்றரை கிலோ தங்க காசுகள் என கூறி 600 பித்தளை காசுகளை கொடுத்து ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற வடமாநில வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஜாபர்கான் பேட்டை ஜவஹர்லால் நேரு சாலையை சேர்ந்தவர் ராஜூவ் (48). இவரது மனைவி ரேணுகா (43). இவர், அதேபகுதியில் பர்னிச்சர் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். ரேணுகா அப்பகுதியில் ஏல சீட்டு மற்றும் தீபாவளி பண்டு பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு ரேணுகா கடைக்கு 2 வடமாநில வாலிபர்கள் பர்னிச்சர் வாங்க வந்துள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் ரேணுகாவிடம் வடமாநில வாலிபர்கள் தங்கள் பெயர் கிஷோர் மற்றும் தாகர் என்று அறிமுகம் ெசய்து பேச்சு கொடுத்துள்ளனர். அதன்படி அவரும் அவர்களிடம் பேசியுள்ளார். அப்போது ஏல சீட்டு நடத்துவதாக அவர்களிடம் ரேணுகா கூறியுள்ளார்.

இதை கேட்ட வடமாநில வாலிபர்கள் இருவரும் எங்களிடம் ஒரு சவரன் தங்க காசுகள் அதிகளவில் உள்ளது. அதை எங்களால் விற்பனை ெசய்ய முடியவில்லை என்று கூறி, தங்களிடம் உள்ள தங்க காசுகளை குறைந்த விலைக்கு நீங்கள் வாங்கி கொள்கிறீர்களா என கேட்டு 4 தங்க காசுகளை கொடுத்துள்ளனர். உடனே ரேணுகா வடமாநில வாலிபர்கள் கொடுத்த தங்க காசுகளை பரிசோதனை செய்த போது முழு தங்கம் என தெரியவந்தது.

உடனே ரேணுகா, எனக்கு உங்களிடம் உள்ள தங்க நாணயங்கள் அனைத்தும் வேண்டும் என்று கூறியுள்ளார். அதை தொடர்ந்து ஒரு மாதம் கழித்து கடந்த 20ம் தேதி ஒன்றரை கிலோ மதிப்புள்ள 600 தங்க காசுகளை கொண்டு வந்து ரேணுகாவிடம் கொடுத்து விட்டு ரூ.25 லட்சம் பணத்தை பெற்று சென்றுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து ரேணுகா தங்க காசுகளை பரிசோதனை செய்த போது அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை காசுகள் என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரேணுகா தங்க காசுக்கு ஆசைப்பட்டு ரூ.25 லட்சம் பணத்தை இழந்து விட்டோமே என்று தவித்தார். உடனே எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பித்தளை காசுகளை கொடுத்து ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற இரண்டு வடமாநில வாலிபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.